லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 558 பேர் பலி; 1,800 பேர் காயம்
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், போர் பதற்றம் குறைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி உலக தலைவர்கள் மற்றும் ஐ.நா. அமைப்பு சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் கடந்த ஆகஸ்டு தொடக்கத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதனால் இஸ்ரேல் கொந்தளித்தது. பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
இந்நிலையில், சில நாட்களாக லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா அமைப்பின் நிலைகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இன்று வரை லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 50 பேர் குழந்தைகள் ஆவர். 1,835 பேர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், பதிலுக்கு ஹிஜ்புல்லா அமைப்பும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், உடனடியாக போர் பதற்றம் குறைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி உலக தலைவர்கள் மற்றும் ஐ.நா. அமைப்பு சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா அமைப்பின் நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பும் ஹைபா, நஹாரியா தி கலிலீ மற்றும் ஜெஜ்ரீல் பள்ளத்தாக்கு பகுதிகளின் மீது இரவு மற்றும் இன்று காலை என அடுத்தடுத்து ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை தொடுத்தது.