பாகிஸ்தானில் கொத்தடிமை கூலிகளாக 7 லட்சம் குழந்தைகள்; அதிர்ச்சி தகவல் வெளியீடு


பாகிஸ்தானில் கொத்தடிமை கூலிகளாக 7 லட்சம் குழந்தைகள்; அதிர்ச்சி தகவல் வெளியீடு
x

பாகிஸ்தானில் கொத்தடிமை தொழிலாளர்களாக உள்ள 17 லட்சம் பேரில் 7 லட்சம் பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.



சிந்த்,



உலக நாடுகளில் இந்தியா உள்பட கொத்தடிமை தொழிலாளர்களாக மனிதர்களை வேலையில் அமர்த்துவதற்கு தடை உள்ளது. அதற்கு எதிரான கடுமையான சட்டமும் அமலில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஹாரி நல கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டு உள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் 17 லட்சம் பேர் கொத்தடிமை கூலிகளாக உள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் குழந்தைகள் என்று தெரிவித்து உள்ளது.

அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலச்சுவான்தாரர்கள், மனிதநேயமற்ற, முறையற்ற வகையிலான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வதற்கு சிக்கலான இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் என அதுபற்றிய செய்தியை டான் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

சிந்த் மாகாணத்தில் 64 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுகிறது.




கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 2021ம் ஆண்டு வரையில், சிந்தில் வேளாண் பிரிவில் நிலச்சுவான்தாரர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 3,329 குழந்தைகளை அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து விடுவிக்கும்படி நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.

விவசாயம் தவிர்த்து, பல்வேறு வேலைகளில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது. இதில், சுரண்டல், துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்.

அவர்களை வளையல் தொழில், செங்கல் சூளை, மீன்பிடித்தல், ஆட்டோ ஒர்க்ஷாப், பருத்தி எடுத்தல், மிளகாய் பறித்தல் உள்ளிட்ட பல வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என என்.ஜி.ஓ.வின் தலைவர் அக்ரம் கஸ்கேலி கூறியுள்ளார்.




அவர் தொடர்ந்து கூறும்போது, அவர்களது வருங்காலம் பற்றி தொடர்புடைய அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. தொழிலாளர்களில் பலர் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களது சம்பளம் ஏஜெண்டுகளிடம் கொடுக்கப்படுகிறது.

அதில் இருந்து சொற்ப அளவிலான பணமே அவர்களது பெற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசும் இதனை புறந்தள்ளுவதுடன், குழந்தை தொழிலாளர் நடைமுறையை ஒழிப்பதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முன்வராமல் உள்ளது. இதனால், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலைமை அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார்.

யுனிசெப் அமைப்பு கூறும்போது, கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில், ஏறக்குறைய 16 கோடி குழந்தைகள் வரை குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என தெரிவித்து உள்ளதுடன், கொரோனா பெருந்தொற்று பாதிப்பினால் கூடுதலாக 90 லட்சம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதன்படி உலக அளவில் 10ல் ஒரு குழந்தை, குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அவர்களில் பாதிக்கும் கூடுதலானோர் ஆபத்து விளைவிக்கும் பணிகளில் ஈடுபடுவதனால், அவர்களின் சுகாதாரம் மற்றும் வளர்ச்சி நிலை பாதிப்புக்கான ஆபத்தும் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story