இஸ்ரேலில் பரபரப்பு: பஸ் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம்


இஸ்ரேலில் பரபரப்பு: பஸ் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம்
x

Image Courtacy:AFP

இஸ்ரேலில் பஸ் மீது நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தலங்களில் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் பஸ்சில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்பட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். எனினும் போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதை தொடர்ந்து போலீசார் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவர்களில் கர்ப்பிணி உள்பட 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமாக போலீசில் சரணடைந்ததாகவும், அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story