பாகிஸ்தானில் 150 ஆண்டு கால இந்து கோவில் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டம்


பாகிஸ்தானில் 150 ஆண்டு கால இந்து கோவில் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டம்
x

பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டம் செய்யப்பட்டு உள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்து இருந்தது.

இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளி கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது.

அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டு சென்றனர்.

கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கின்றது.

அந்த பகுதியில் உள்ள பழமையான மற்றொரு கோவிலான ஸ்ரீபஞ்சமுக அனுமன் கோவிலை சேர்ந்த ஸ்ரீராம் நாத் மிஷ்ரா மகராஜ் இதுபற்றி கூறும்போது, இது மிக பழமையான கோவில். 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்.

இந்த பகுதியில், மிக பழமையான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி இந்து சமூக உறுப்பினர் ஒருவர் கூறும்போது, எங்களை கட்டாயப்படுத்தி இரண்டு பேர் வெளியேற்றினர். இந்த கோவிலை மற்றொரு நபருக்கு பாகிஸ்தான் கரன்சி மதிப்பின்படி ரூ.23 கோடிக்கு விற்க 2 பேர் ஆலோசித்து வந்தனர். அதனை வாங்க விரும்புபவர்கள் அந்த இடத்தில் வர்த்தக கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்து உள்ளனர் என கூறியுள்ளனர்.


Next Story