ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள 20 ஆண்டுகள் ஆகலாம் - பிரெஞ்சு மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


ஐரோப்பிய ஒன்றியத்தில்  உக்ரைனை சேர்த்துக்கொள்ள 20 ஆண்டுகள் ஆகலாம் - பிரெஞ்சு மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
x

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரைனின் முயற்சியானது, இன்னும் 20 ஆண்டுகளுக்கு இறுதி செய்யப்படாது என பிரான்ஸ் நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.

பாரிஸ்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரைனின் முயற்சியானது, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு இறுதி செய்யப்படாது என பிரான்ஸ் நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்.

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேrஉவது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம். இது மிக நீண்ட காலம் எடுக்கும். நாங்கள் மாயைகளையும் பொய்களையும் உக்ரைன் மக்களிடம் சொல்ல விரும்பவில்லை.

நாம் உக்ரேனியர்களிடம், "ஐரோப்பிய யூனியனுக்கு உங்களை வரவேற்கிறோம், ஆனால் நீங்கள் ஒப்பந்தத்தை முழுமையாக படிக்கவில்லை, அதன் அடிக்குறிப்பு என்ன கூறுகிறது என்று வாசிக்கவும்: அது நிறைவேற இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது" - இவ்வாறு அவர்களிடம் கூறினால், நாம் 'ஒரு முழு தலைமுறை உக்ரேனியர்களின் ஏமாற்றத்திற்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று நினைக்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், உக்ரைனுடன் இணைந்து ஒரு தளர்வான "ஐரோப்பிய அரசியல் சமூகத்தை" உருவாக்குவதற்கான வாய்ப்பை முன்மொழிந்ததை மந்திரி கிளெமென்ட் பியூன் மீண்டும் வலியுறுத்தினார். இதன்மூலம், உக்ரைனை விரைவில் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒருங்கிணைக்க உதவும் என்றார்.

இருப்பினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் இருந்து அந்த சலுகைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக, "அத்தகைய சமரசங்களை" அவர் கண்டித்தார்.மேலும், முழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக உக்ரைன் ஆவதற்கான செயல்முறையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.


Next Story