சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து


சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை; இலங்கை வரலாற்றில் முக்கியமான படி - ரணில் விக்கிரமசிங்கே கருத்து
x

இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர்.

இந்த தொடர் போராட்டம் மிகப்பெரும் புரட்சியாக வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த ஜூலை 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் பல்வேறு புதிய பொருளாதார நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை இலங்கை அரசு நாடி வருகிறது.

சமீபத்தில் சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இலங்கை தரப்பில் 5 பில்லியன் டாலர் (ரூ.40 ஆயிரம் கோடி) கடன் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி, முதல்கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை இலங்கை வரலாற்றில் முக்கியமான படி என்று தெரிவித்தார்.

திவால் நிலையில் இருந்து விடுபடுவது முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை செலுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இது புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் அவர் கூறினார்.


Next Story