பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி தலைவர்களின் மற்றொரு உரையாடல் ஆடியோ கசிவு


பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி தலைவர்களின் மற்றொரு உரையாடல் ஆடியோ கசிவு
x

பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி கொள்ளும் மற்றொரு உரையாடல் ஆடியோ பதிவு கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


லாகூர்,


பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவரது கட்சியுடன் கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் அவர் பேசுகிற உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவுகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் கசிந்து அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தின.

இதேபோன்று, மற்றொரு ஆடியோ ஒன்றும் கசிந்துள்ளது. இந்த பதிவில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் பேசுகிறார்.

அதில், சுகாதார காப்பீடு அட்டை வழங்கும் சேவையை நிறுத்தும்படி, பிரதமரிடம் மரியம் கூறுகிறார். ஏனெனில் அதனால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது என அதற்கான காரணங்களையும் அவர் கூறுகிறார்.

இந்த இலவச சேவையானது, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் முந்தின ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற்று வந்தனர்.

அந்த ஆடியோ பதிவில், இந்த சுகாதார அட்டை திட்டம் தவிர, பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி தலைவர் வேறெதுவும் சாதிக்கவில்லை என மரியம் கூறுவதும் கேட்கிறது. இதற்கு பிரதமர் ஷெபாஸ், அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை என கூறுகிறார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, சமீபத்தில் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். அதற்கு சான்றாக ஆளும் அரசின் கூட்டணி தலைவர்களின் கசிந்த உரையாடல் ஆடியோவையும் வெளியிட்டார்.

அவர், தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவுடன், பிரதமர் நாட்டை விட தனது குடும்ப நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார் என்பது தெரிகிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.

அதுபற்றி அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் பேசுவது போன்ற குரல் கேட்கிறது. அதில், மரியம் நவாஸ் ஷெரீப், தனது மருமகனான ரஹீல் என்பவருக்கு இந்தியாவில் இருந்து, மின் உலை சார்ந்த இயந்திரம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வசதிகளை செய்து தரும்படி என்னிடம் கேட்டுள்ளார் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு அதிகாரி ஒருவரிடம் கூறுகிறார்.

அதற்கு அந்த உயரதிகாரி, நாம் இப்படி செய்தோம் என்றால், இந்த விவகாரம் அமைச்சரவைக்கு செல்லும். பின்னர், கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என கூறுவது கேட்கிறது.

அதற்கு பிரதமர் ஷெரீப், அந்த மருமகன் மரியம் நவாசுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். இந்த விவகாரம் பற்றி மரியமிடம் நீங்கள் விரிவாக எடுத்து கூறுங்கள். அதன்பின்னர், மரியமிடன் நான் பேசுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு அந்த அதிகாரி, இது அரசியல் சிக்கலை உருவாக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கிறார்.

இதேபோன்று பல மணிநேரம் ஓட கூடிய நீண்ட ஆடியோ பதிவில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப், பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப், சட்ட மந்திரி அசம் தரார், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா மற்றும் முன்னாள் சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் அடங்கியுள்ளன.

இந்த ஆடியோ கசிவால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மற்றொரு ஆடியோ உரையாடல் கசிந்து உள்ளது.


Next Story