40 ஆயிரம் அடி உயரத்தில்... மரணத்தில் இருந்து நபரை மீட்க 5 மணிநேரம் போராடிய டாக்டர்


40 ஆயிரம் அடி உயரத்தில்... மரணத்தில் இருந்து நபரை மீட்க 5 மணிநேரம் போராடிய டாக்டர்
x

லண்டனில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை மரணத்தில் இருந்து காப்பாற்ற 2 முறை இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் போராடியுள்ளார்.



லண்டன்,


இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. இதில், டாக்டர் விஷ்வராஜ் விமலா (வயது 48) என்ற இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் தனது தாயாருடன் பயணித்துள்ளார்.

அவருடன் 43 வயது சக பணியாளர் ஒருவர் விமானத்தில் வந்துள்ளார். இந்நிலையில், திடீரென்று அந்த பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக விஷ்வராஜ் செயல்பட்டு அந்த பயணியை காப்பாற்றும் பணியில் இறங்கியுள்ளார்.

விமானத்தில் முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள் இருந்துள்ளன. அவற்றின் உதவியுடன், இதய துடிப்பு கண்காணிப்பு உபகரணம், ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி மற்றும் சக பயணிகள் தந்த பொருட்களை கொண்டு அந்த நபரை காப்பாற்ற போராடியுள்ளார்.

இதுபற்றி டாக்டர் விஷ்வராஜ் கூறும்போது, எனது மருத்துவ பயிற்சியின்போது இதுபோன்ற சூழல்களை சந்தித்து உள்ளேன். ஆனால், 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இதுபோன்ற ஓர் அனுபவம் ஏற்பட்டது இல்லை. ஏறக்குறைய ஒரு மணிநேரம் போராடி அவருக்கு மீண்டும் சுவாசம் கொண்டு வரவைத்தேன்.

அதிர்ஷ்டவசத்தில், அவசரகால உபகரணங்கள் விமானத்தில் இருந்தன. சக பயணிகள் ஒவ்வொருவரிடமும் பேசி, குளுக்கோஸ் மீட்டர் உள்ளிட்ட பல உபகரணங்களை பெற்றேன்.

எனினும், 2-வது முறையாக அந்த நோயாளிக்கு மற்றொரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இந்த முறை நீண்டநேரம் அவரை காப்பாற்ற போராடி வேண்டியிருந்தது. மொத்தம் 5 மணிநேரம் அவரை உயிருடன் வைத்திருக்க நாங்கள் முயற்சித்து கொண்டிருந்தோம்.

இதனை தொடர்ந்து, விமானம் வரும் வழியில் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணியை அவசரகால குழுவினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

7 வருட மருத்துவ பணியில் எனது தாயார் முதன்முறையாக அதிரடியாக நான் செயல்பட்ட விசயங்களை பார்த்து ஆச்சரியம் கொண்டார். அது என்னை இன்னும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது.

இதன்பின்பு, அந்த நோயாளி மருத்துவரை பார்த்து கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார். இதற்காக நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார். இது தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என மருத்துவர் கூறுகிறார்.


Next Story