பாகிஸ்தானில் சீனர்கள் மீது தாக்குதல்; பயண விவரங்களை போலீசிடம் தெரிவிக்க உத்தரவு


பாகிஸ்தானில் சீனர்கள் மீது தாக்குதல்; பயண விவரங்களை போலீசிடம் தெரிவிக்க உத்தரவு
x

பாகிஸ்தானில் சீனர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சூழலில் தங்களது பயண விவரங்களை அவர்கள் போலீசிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.



லாகூர்,



பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள கராச்சி பல்கலை கழகத்தின் வளாக பகுதியில் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்பட 3 சீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு, சீனர்கள் தங்களது பாதுகாப்பிற்காக, வேறு இடங்களுக்கு செல்வதற்கு முன் போலீசாரிடம் அதுபற்றிய விவரங்களை தெரிவித்து விட்டு செல்லும்படி இஸ்லாமாபாத் நகர அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து சீனர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவு ஒன்றை மத்திய காவல் அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமாபாத் போலீஸ் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என இஸ்லாமாபாத் போலீஸ் தெரிவித்து உள்ளது.

அவர்கள் வெளியே செல்லும்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இதற்காக நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீனர்களின் குடியிருப்புகளை சுற்றிலும் மற்றும் அவர்களது வீடுகளுக்கு செல்லும் வழியிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்படும்.

இதுதவிர, சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கான பணிகளுக்கு பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பலூசிஸ்தானில் வசித்து வரும் ஊடுருவல் குழுக்கள், 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கான பணிகள் மீது கடந்த காலங்களில் பல்வேறு முறை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத குழுவினர் கூறுகின்றனர்.


Next Story