ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: மத்திய வெளியுறவு மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:  மத்திய வெளியுறவு மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு
x

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ராவுக்கு சென்ற மத்திய வெளியுறவு துறை மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு அளிக்கப்பட்டது.



கேன்பெர்ரா,


நியூசிலாந்துக்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அதனை முடித்து கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, அந்நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்து உள்ளார். அவருக்கு, இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் வகையில் நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ரா மற்றும் சிட்னி ஆகிய நகரங்களுக்கு அவர் செல்கிறார். கடந்த பிப்ரவரியில், நடப்பு ஆண்டில் முதன்முறையாக மெல்போர்ன் நகரில் நடந்த குவாட் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த சுற்றுப்பயணத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர், சக வெளியுறவு துறை மந்திரியான பென்னி வாங்கை சந்தித்து 13-வது வெளியுறவு மந்திரிகள் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதேபோன்று, அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான ரிச்சர்டு மார்லெஸ்சையும் சந்தித்து பேசுகிறார்.


Next Story