10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்


10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
x

Image Credit : President.gov.ua

10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்மொழிந்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 115-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்மொழிந்துள்ளார்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் உக்ரேனிய ராணுவ துருப்புக்களுக்கான பயிற்சித் திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக முன்மொழிந்தார்.

ரஷியாவுடனான போர் தொடங்கிய பின், உக்ரைனுக்கு அவர் 2வது முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமையை பற்றி இருவரும் விவாதித்தனர்.

இதுபற்றி ஜான்சன் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் அதில் பதிவிட்டு உள்ளார்.

இதன் கீழ், குறைந்தது 10,000 உக்ரைன் வீரர்கள் 120 நாட்களுக்கு பயிற்சி பெறுவார்கள் என்று ஜான்சன் தெரிவித்துள்ளார்.


Next Story