சீனா: நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; மருந்துகள் தட்டுப்பாடு மக்கள் அவதி


சீனா:  நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்; மருந்துகள் தட்டுப்பாடு மக்கள் அவதி
x

சீனாவில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் வாங்கி, அனுப்பும் சூழல் காணப்படுகிறது.



பீஜிங்,


சீனாவில் உகான் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019 டிசம்பர் இறுதில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு பிற நாடுகளுக்கும் பரவியது.

சீனாவில் முதலில் தொற்று அறியப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளால் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உலக நாடுகளை அச்சரியத்தில் தள்ளியது. இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், சீனாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் எதிரொலியாக கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

இதனால், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குளிர்காலம் தொடங்கியுள்ள சூழலில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத சீனர்களும், உலக அளவில் 10 சதவீதத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடும் என்று சர்வதேச தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களில் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. சீனாவில் கொரோனாவின் உருமாறிய வகையான பி.எப்-7 என்ற வைரசானது பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தேவையான மருந்து பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் வாங்கி, அனுப்பும் சூழல் காணப்படுகிறது.

இதன்படி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் கூட கூரியர் வழியே தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனா மருந்துகளை வாங்கி அனுப்பி வைக்கின்றனர். அவர்களும் மருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாங்கி வைத்து வருகின்றனர்.

சீனாவின் உள்நாட்டு தடுப்பூசிகள் குறைந்த அளவே நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டவை என்பதும் இதற்கு காரணிகளாக உள்ளன. குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவற்றால் அந்நாட்டில் பலர் எளிதில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவதும் காணப்படுகிறது.


Next Story