தைவானை நோக்கி 39 போர் விமானங்களை அனுப்பியது, சீனா - திடீர் போர்ப்பதற்றம்


தைவானை நோக்கி 39 போர் விமானங்களை அனுப்பியது, சீனா - திடீர் போர்ப்பதற்றம்
x

கோப்புப்படம்

தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதால், அங்கு திடீரென போர்ப்பதற்றம் நிலவுகிறது.

தைபே,

தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் உள்ள தீவு நாடு தைவான். அமெரிக்காவின் நட்பு நாடாக இது விளங்குகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த சண்டையைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது.

தைவான் தனி நாடாக இறையாண்மையுடன் விளங்கி வருகிறது.

ஆனால் சீனா, தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கிறது. இதற்கு அமெரிக்கா, சீனப்பெருஞ்சுவர்போல பெரும் தடையாக நிற்கிறது.

தைவானை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கொக்கரித்து வருகிறார். அதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என்னும் ரீதியில் ஏற்கனவே அவர் பேசி உள்ளார்.

அமெரிக்கா ஆதரவு

சீனா, மீண்டும் தைவானை தன்னில் இணைத்துக்கொண்டு விட்டால், அது பசிபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட வழிவகுப்பதுடன், குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமையும்.

ஆனால் தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி உள்ளிட்ட தலைவர்கள் சென்று வந்ததும் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் சீன ராணுவம் பெரும்போர்ப்பயிற்சிகளை நடத்திக்காட்டியது. இப்படி தைவானை சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

போர்ப்பதற்றம்

இந்த நிலையில், கொரோனா எழுச்சி அலையால் அல்லலுற்று வருகிற சூழலில் தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் கடந்த 24 மணி நேரத்தில் அனுப்பி வைத்திருப்பதாக தைவான் ராணுவ அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டு, உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி விரையில் சீனாவின் 30 போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் நடுப்பகுதியைக் கடந்துள்ளன. இது அதிகாரப்பூர்வ எல்லையாக இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

சீனா அனுப்பிய போர் விமானங்களில் 'ஜே-16' ரக போர் விமானங்கள் 21-ம், 4 'எச்-6' குண்டுவீச்சு விமானங்களும், 2 முன் எச்சரிக்கை விமானங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தைவான் கூறும்போது, தங்கள் நில அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகள் மற்றும் தங்கள் கடற்படை கப்பல்கள் மூலம் கண்காணித்ததாக தெரிவித்தது. சீனாவின் அடாவடியால் தைவானில் போர்ப்பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.


Next Story
  • chat