குஜராத் பாலம் விபத்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்


குஜராத் பாலம் விபத்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்
x

Image Courtesy: AFP/ PTI 

இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பெய்ஜிங்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.

இதனிடையே, சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது.

இதில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த அனைவரும் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், " சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக, குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.


Next Story