பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது: கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டம்


பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது: கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டம்
x

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது. இலங்கை கடற்படையுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடுகிறது.

கொழும்பு,

சீன உளவு கப்பலான யுவான் வாங்-5, கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால், வருகையை தள்ளிப்போடுமாறு இலங்கை கூறியதால் அந்த கப்பல் இன்னும் வரவில்லை. அதே சமயத்தில், பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ்.தைமுருக்கு கொழும்பு துறைமுகத்துக்கு வர இலங்கை அனுமதி அளித்தது. அந்த கப்பல், மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் பயிற்சி முடித்து விட்டு, வங்காளதேசத்தின் சட்டோகிராம் துறைமுகத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.

ஆனால், வங்காளதேச அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே, பாகிஸ்தானின் கராச்சிக்கு திரும்பும்வழியில் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-இலங்கை கடற்படைகள் இடையே ஒத்துழைப்பையும், நல்லெண்ணத்தையும் உருவாக்க இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் அந்த கப்பலின் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், மேற்கு கடல் பகுதியில், இலங்கை கடற்படையுடன் சேர்ந்து அக்கப்பல் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகிறது. அதைத்தொடர்ந்து, 15-ந் தேதி, கொழும்பில் இருந்து புறப்படுகிறது.

பி.என்.எஸ்.தைமுர் கப்பல், சீனாவில் வடிவமைக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு 4 போர்க்கப்பல்களை கட்டித்தர சீனா ஒப்புக்கொண்டது. அதில் ஒரு கப்பலை கடந்த ஜனவரி மாதம் அளித்தது. இரண்டாவதாக, இந்த கப்பலை கடந்த ஜூன் மாதம் ஷாங்காயில் வைத்து ஒப்படைத்தது. சமீபத்தில், பாகிஸ்தான் கடற்படையில் இது சேர்க்கப்பட்டது. மீதி 2 கப்பல்களின் கட்டுமான பணி நடந்து வருகிறது.

134 மீட்டர் நீளமுள்ள தைமுர் கப்பல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தொழில்நுட்ப ஆயுதங்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.


Next Story