இலங்கை துறைமுகத்தை நோக்கி வரும் சீன கப்பல் - பயணத்தை தொடங்கியதாக தகவல்


இலங்கை துறைமுகத்தை நோக்கி வரும் சீன கப்பல் - பயணத்தை தொடங்கியதாக தகவல்
x

இலங்கையின் வேண்டுகோளை மீறி, சீன கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு,

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகத்துக்கு சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற போர்க்கப்பல், வர இருப்பதாக சீனா அறிவித்தது. பின்னர் அதை இலங்கை அரசு உறுதி செய்தது. ஆகஸ்ட் 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்த கப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் என சீனா தெரிவித்தது.

ஆனால் இலங்கை வரும் சீன கப்பல் ஒரு உளவு கப்பல் என்றும், அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இலங்கை அரசிடம் இந்தியா தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து, ஹம்பன்தொட்டா துறைமுகம் வரும் 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ஒத்திவைக்கும்படி சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் வேண்டுகோளை மீறி, சீன கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 23 ஆயிரம் டன் எடை கொண்ட 'யுவான் வாங்-5' கப்பல், 400 பேர் கொண்ட குழுவுடன் இன்று காலை 10 மணிக்கு இந்தோனேசியா கடற்கரையில் இருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வந்தடையும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக இலங்கையின் கடிதத்திற்கு சீன அரசு அளித்த பதிலில், இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல், "சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story