பருவநிலை மாற்றம் எதிரொலி: 30 நாடுகளில் காலரா பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


பருவநிலை மாற்றம் எதிரொலி: 30 நாடுகளில் காலரா பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2022 3:59 PM IST (Updated: 17 Dec 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.



ஜெனீவா,


உலக அளவில் காலரா பரவலானது, இதற்கு முந்தின கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2022-ம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவா நகரில் பேசும்போது, நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது.

கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், காலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதும் ஆகும். தொற்று மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் காலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன என அவர் கூறுகிறார். பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

பெரிய அளவிலான வெள்ளம், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பருவமழை மற்றும் தொடர்ச்சியான சூறாவளி புயல்கள் ஆகியவற்றுடன் இந்த தொற்றும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஹைதி, லெபனான், மாளவி மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் நடப்பு கோடை கால பெருவெள்ளத்திற்கு பின்பு, 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், இந்த சூழல் வரும் 2023-ம் ஆண்டில் விரைவாக மாறி விட போவதில்லை. ஏனெனில், தொடர்ந்து 3-வது ஆண்டாக லா நினா என்ற பருவகால பாதிப்பானது தொடரும் என வானியல் ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளனர்.

அதனால், 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் என்ன நிலை காணப்பட்டதோ, அதே நிலையை மீண்டும் நாம் காண கூடும். லா நினாவுடன் கூடிய இயற்கை பேரிடரால், வறட்சி மற்றும் மழை மற்றும் சூறாவளி புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை ஏற்படும் என பார்போசா கூறுகிறார்.

இவற்றில், கிழக்கு மற்றும் தென்பகுதி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசிய நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.

கெட்டு போன உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதனால், பரவ கூடிய இந்த வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் ஏற்பட கூடிய காலரா தொற்றானது ஆண்டுக்கு, 40 லட்சம் பேரை பாதிக்கிறது. இதனால், 21 ஆயிரம் முதல் 1.43 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story