வாருங்கள் சொர்க்கம் போவோம்; கிறிஸ்தவ பாதிரியாரை நம்பி உயிரை விட்ட கென்ய மக்கள்


வாருங்கள் சொர்க்கம் போவோம்; கிறிஸ்தவ பாதிரியாரை நம்பி உயிரை விட்ட கென்ய மக்கள்
x

கென்யாவில் கிறிஸ்தவ பாதிரியாரை பின்பற்றி, சொர்க்கம் போவதற்காக பட்டினி இருந்து 47 பேர் உயிரை விட்ட சோகம் தெரிய வந்து உள்ளது.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்.

இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த குழுவினரிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்.

அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து உள்ளனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார்.

இதுவரை இதுபோன்று 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story