கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் அதிகரிக்கும்: அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்


கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் அதிகரிக்கும்:  அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்
x

கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு சார்ந்த மரணம் இளைஞர்களிடம் அதிகரிக்கிறது என அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.


புளோரிடா,


உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரை உயிர்ப்பலி வாங்கிய கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனை 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தியும் வருகின்றனர். இதுதவிர்த்து, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசியும் போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்பவர்களில், 18 முதல் 39 வயதுடைய இளைஞர்களுக்கு மாரடைப்பு தொடர்புடைய மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளவர் டாக்டர் ஜோசப் ஏ. லடாபோ. இவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பூசிகள் பற்றி நாங்கள் பகுப்பாய்வு செய்து உள்ளோம். அதுபற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளோம்.

இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்து உள்ளார். இதன்படி, 18 முதல் 39 வயதுடைய ஆண்களுக்கு இந்த வகை கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு தொடர்புடைய மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த உண்மையை பற்றி அறிந்து கொண்டு, புளோரிடா அமைதியாக இருக்காது என அவர் தெரிவித்து உள்ளார்.

புளோரிடாவின் சுகாதார துறையும் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி அறிவதற்கான தொழில்நுட்பம் சார்ந்த பகுப்பாய்வு சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இந்த தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட 28 நாட்களுக்கு பின் மரணத்திற்கான வாய்ப்பு 84 சதவீதம் அதிகரித்து உள்ளது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது. இதனை புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ் மற்றும் லடாபோ கையொப்பமிட்ட புளோரிடா சுகாதார அறிவுறுத்தலும் தெரிவிக்கின்றது.

இந்தியாவை எடுத்து கொண்டால் இந்த வகை தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதன்படி, உள்நாட்டிலேயே முதன்முறையாக தயாராகி உள்ள ஜெம்கோவேக்-19 என்ற எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பூசியானது 2 மற்றும் 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இதன் பாதுகாப்பு பற்றிய இந்த சோதனையில், இதுவரை 4 ஆயிரம் பேர் வரை பங்கு பெற்று உள்ளனர்.

நோயெதிர்ப்பு ஆற்றல், கோவிஷீல்டை விட இது குறைந்ததல்ல என்றும், தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் நன்றாக தாங்ககூடிய சக்தி படைத்தது என்றும் ஜென்னோவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த 2 டோஸ் தடுப்பூசியானது 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும்.


Next Story