கொரோனா வைரசின் தோற்றம் இதுவா...? சீன விஞ்ஞானி வெளியிட்ட அதிரடி தகவலால் பரபரப்பு


கொரோனா வைரசின் தோற்றம் இதுவா...? சீன விஞ்ஞானி வெளியிட்ட அதிரடி தகவலால் பரபரப்பு
x

கொரோனா வைரசின் தோற்றம் சீனா என உலக நாடுகள் கூறி வந்த நிலையில், அதற்கு சீன விஞ்ஞானி ஒருவர் அளித்த விளக்கம் பரபரப்பு கூட்டியுள்ளது.

தைப்பே,

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது.

எனினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக பரவ தொடங்கி பல்வேறு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது பல தொடர் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் நீண்டகால தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது.

ஒருபுறம், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டு உள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. ஆனால், இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்தியாவில் சமீப நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தோற்றம் பற்றி பீஜிங் ரசாயன தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் பேராசிரியரான டாங் யிகாங் கூறும்போது, சீனாவின் உகான் நகரில் ஹூவானன் கடல் உணவு சந்தையில் இருந்து வைரசின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டதற்காக அது பெருந்தொற்று தோற்றத்திற்கான இடம் என நினைக்கின்ற அதேவேளையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் இதேபோன்ற ஒத்த மாதிரியான மரபணு தொடர்கள் இருப்பதனால், கொரோனாவானது மனிதர்களிடம் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறியுள்ளார்.

கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான சீன மாநில கவுன்சில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் தொடர்ந்து பேசும்போது, 2020-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், உகான் உணவு சந்தையில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் உறைந்த விலங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு, 3 வைரசின் தொடர்களை ஆய்வாளர்கள் பிரித்து எடுத்தனர்.

சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்தது போன்று, கொரோனாவுக்கான தோற்றம் ரக்கூன் நாய்கள் என்பதற்கான சமீபத்திய ஆய்வுகளின் தரவுகளுக்கான போதிய சான்றுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என டாங் கூறியுள்ளார்.

இதேபோன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கான ஆய்வாளர் ஜாவ் லெய் இதே நிகழ்ச்சியில் பேசும்போது, கொரோனா தோற்றம் பற்றி கண்டறிவதில் சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார். கொரோனா வைரசானது முதலில் கண்டறியப்பட்டதற்காக அந்த இடத்தில் இருந்து அது தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால், கொரோனாவின் தோற்றம் சீனா இல்லை என அந்நாட்டு ஆய்வாளர்கள் திட்டவட்டமுடன் மறுத்து உள்ளனர். ஆய்வகத்தில் இருந்து கசிந்து இருக்க கூடும் என்ற கூற்றையும் ஜாவ் மறுத்து இருக்கிறார். அதற்கான சாத்தியமே இல்லை என அவர் கூறியுள்ளார்.

டாங்கின் கூற்றுப்படி கொரோனா வைரசானது மனிதர்களிடம் இருந்தே தோன்றியிருக்க கூடும் என கூறி, சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார். அதனுடன், உகான் சந்தைக்கு மனிதர்களாலேயே கொரோனாவானது பரப்பி விடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். விலங்குகளிடம் இருந்து பரவியதற்கான போதிய சான்றுகளும் இல்லை என கூறியுள்ளார்.

எனினும், இன்னும் கொரோனாவின் தோற்றம் பற்றிய கண்டறிதலோ, அதனை பற்றிய முழுமையான புரிதலோ இல்லாத நிலையே நீடித்து வருகிறது.


Next Story