அமெரிக்காவில் கொடூரம்; வெறுப்புணர்வு தாக்குதலில் 6 வயது சிறுவன் 26 முறை கத்தியால் குத்தி கொலை


அமெரிக்காவில் கொடூரம்; வெறுப்புணர்வு தாக்குதலில் 6 வயது சிறுவன் 26 முறை கத்தியால் குத்தி கொலை
x
தினத்தந்தி 16 Oct 2023 10:28 AM GMT (Updated: 16 Oct 2023 12:02 PM GMT)

அமெரிக்காவில் வெறுப்புணர்வு தாக்குதலில் 6 வயது சிறுவன் 26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மேற்கே 64 கி.மீ. தொலைவில் 32 வயதுடைய முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது வீட்டு உரிமையாளரான ஜோசப் ஜூபா (வயது 71) என்பவர் வந்து கதவை தட்டியுள்ளார். அந்த பெண் கதவை திறந்ததும், ஜோசப் அவரை கழுத்து பகுதியை நெரித்து, மூச்சு திணறும்படி செய்திருக்கிறார்.

அந்த பெண் மற்றும் அவருடைய மகனை ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார். இதில், இருவரின் மார்பு, உடல் மற்றும் மேல் பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த தாக்குதலில் சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவனின் உடலில் 26 காயங்கள் உள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல், அவர்கள் இருவரும் முஸ்லிம் ஆகிய காரணங்களால் இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும் என போலீசார் அவற்றை தொடர்புப்படுத்தி கூறியுள்ளனர். அந்த சிறுவன் பாலஸ்தீனிய அமெரிக்கன் என அமெரிக்க மற்றும் இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (சி.ஏ.ஐ.ஆர்.) தெரிவித்து உள்ளது.

போலீசார் வந்தபோது, ஜோசப் நெற்றியில் காயத்துடன் வீட்டின் வாசல் பகுதியில் தரையில் அமர்ந்த நிலையில் காணப்பட்டார். அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு எதிராக வெறுப்புணர்வு, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

நீங்கள் முஸ்லிம்கள், இறக்க வேண்டும் என தாக்குதலின்போது ஜோசப் ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் தன்னுடைய கணவருக்கு குறுஞ்செய்தி வழியே தெரிவித்து இருக்கிறார். இந்த படுகொலையை வெறுப்புணர்வின் பயங்கர செயல் என்று அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story