மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்


மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்
x

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.

கோலாலம்பூர்,

மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்றார். அங்கு அவர் மலேசியாவின் ராணுவ மந்திரி மற்றும் வெளியுறவு மந்திரியை தனிதனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் ராஜ்நாத் சிங் நேற்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு சென்றார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்று நாளைத் தொடங்குவது ஆசீர்வதிக்கப்பட்டது. உலகளாவிய இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, மலேசியாவில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் செழுமையான பாரம்பரியத்திற்கு சான்றாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மலேசியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை பத்துமலை கோவில் கமிட்டி தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மற்றும் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.


Next Story