நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்' - டிரம்ப் எச்சரிக்கை


நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Aug 2023 8:54 PM GMT (Updated: 22 Aug 2023 6:59 AM GMT)

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. தோல் தயாரிப்புகள், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

'சிறப்பு வர்த்தக நாடு' என அங்கீகாரம் கொடுத்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது.

பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கூடுதல் வரி

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக கூறி இந்திய வரி விதிப்பு முறையை கடுமையாக சாடினார்.

இருநாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது எனக்கூறி சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது பரபரப்பு கிளம்பியது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பேட்டி எடுத்தது. அதில் இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

வரிவசூல் ராஜா

'வரிவசூல் ராஜா' என இந்திய நாட்டை சாடிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பு குறித்து பேசினார்.

"பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை" எனக்கூறும் அவர் "தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் "அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி" என்றார்.

பிரசார விவாதம் புறக்கணிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கான விவாதங்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு கட்டங்களாக நடத்த இருந்தது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் பிரச்சினைகள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து காரசாரமாக விவாதித்து கொள்வர்.

இதனை டிரம்ப் தவிர்க்கப் போவதாக சமூக வலைளத்தளத்தில் கூறியுள்ளார். "அமெரிக்க மக்களுக்கு நான் எவ்வளவு வெற்றிகரமான ஜனாதிபதியாக இருந்தேன் என தெரியும்" என கூறும் அவர், "மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களுடன் விவாதிப்பது வீண்" என்று கூறியுள்ளார்.


Next Story