ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தம்


ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தம்
x

உக்ரைன் ராணுவம் ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் தலைநகர் மாஸ்கோவில் விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரினால் கணக்கிலடங்கா உயிர்கள் பறிபோனது. மேலும் பலகோடி மதிப்பிலான சேதங்கள் பதிவாகி தொடர்ந்து வருகிறது. போரில் ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் இருநாடுகளும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்துகிறார்கள். ஆளில்லா விமானத்தை கொண்டு நடத்தும் தாக்குதலில் குறிப்பிட்ட இலக்கை எவ்வித சிரமுமின்றி தகர்க்க ஏதுவாக அமைகிறது.

இந்த நிலையில் ரஷியா தலைநகரான மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ரஷியாவின் வான் பாதுகாப்பு தளவாடங்களின் ரேடாரில் சிக்காமல் வந்த 3 டிரோன்கள் தலைநகரை தகர்க்க முன்னேறின. இதனை நோட்டமிட்ட ரஷிய ராணுவத்தினர் மொஜாய்ஸ்கி நகரை சுற்றி வந்த 2 டிரோன்களை இடைமறித்தனர். பின்னர் துப்பாக்கிகளால் அதனை சுட்டு வீழ்த்தினர். மேலும் கிம்கி நகருக்குள் புகுந்த ஒரு டிரோனை எலக்ட்ரானிக் ஜாமர்களை கொண்டு செயலிழக்க செய்தனர். இதனால் வானில் பறந்து கொண்டிருந்த டிரோன்கள் கட்டிடங்கள் மேல் விழுந்து நொறுங்கின.

இந்த தாக்குதலில் வணிக வளாக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமாகின. இதனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என ரஷிய ராணுவத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோவில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முக்கிய விமானநிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. மீட்புப்பணி முடிவுக்கு பின்னர் விமான போக்குவரத்து சீரானது.

அண்மை நாட்களில் போரின் வீரியத்தை கூட்டும் முயற்சியில் உக்ரைன் நடவடிக்கை அமைந்து வருகிறது. ரஷிய தலைநகரை குறிவைத்து அவ்வப்போது நடக்கும் டிரோன் தாக்குதலால் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷிய டிரோன்கள் தாக்குதல் நடத்தின. 3 மணிநேரத்திற்கும் மேலாக அமைந்த இந்த தாக்குதலில் அந்த நகரத்தை 9 நவீன டிரோன்கள் சின்னாபின்னமாக்கியது.


Next Story