இங்கிலாந்து தலைவர்களிடம் காலிஸ்தான் பிரச்சனையை எழுப்பிய ஜெய்சங்கர்


இங்கிலாந்து தலைவர்களிடம் காலிஸ்தான் பிரச்சனையை எழுப்பிய ஜெய்சங்கர்
x

இங்கிலாந்து வெளியுறவுத் துறை மந்திரி டேவிட் கேமரூனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லண்டன்:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இங்கிலாந்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உயர் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் பற்றிய இந்தியாவின் நீண்டகால கவலைகளையும் இந்த சந்திப்பின்போது எழுப்பினார். குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவலை எழுப்பினார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஒரு முக்கியமான காரணியாக இந்தியா-இங்கிலாந்து உறவை மேம்படுத்தும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக ரிஷி சுனக், ஜெய்சங்கர் இருவரும் தெரிவித்தனர்.

மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான எதிர்கால திட்டத்தை செயல்படுத்துவதை மதிப்பாய்வு செய்தனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்தனர்.

இங்கிலாந்தில் இருந்து புறப்படுவதற்கு முன் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பத்திரிகையாளர்களுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். அப்போது, இங்கிலாந்து மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, உலகளாவிய மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவரித்தார்.


Next Story