ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடமில்லாதது அபத்தமானது - எலான் மஸ்க்


ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடமில்லாதது அபத்தமானது - எலான் மஸ்க்
x
தினத்தந்தி 23 Jan 2024 8:33 AM GMT (Updated: 23 Jan 2024 8:39 AM GMT)

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவுக்கு ஐ.நா.வில் உரிய அங்கீகாரம் இல்லை என மஸ்க் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், இந்த பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷியா, இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த 5 நாடுகளுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்யும் வகையில் வீட்டோ எனப்படும் உரிமை இந்த 5 நாடுகளுக்கும் உள்ளன.

அதேவேளை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகின்றன.

இதனிடையே, ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருநாடு கூட ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்தை பெறவில்லை என்பதை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஐ.நா. சபை 80 ஆண்டுகளுக்கு முன்பான சூழ்நிலையை விட இன்றைய சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டும்' என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த இஸ்ரேலை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தொழிலதிபர் மைக்கேல் ஐசென்பெர்க், இந்தியாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கூறினார்.

அந்த டுவிட் வைரலான நிலையில் இது தொடர்பாக உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவுக்கு ஐ.நா.வில் உரிய அங்கீகாரம் இல்லை என மஸ்க் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு கட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு மறுசீராய்வு தேவைப்படுகிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள நாடுகள் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளபோதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்படவில்லை. இது மிகவும் அபத்தமானதாகும். ஆப்பிரிக்காவுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Next Story