இங்கிலாந்தில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்: அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம்


இங்கிலாந்தில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்: அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம்
x

கோப்புப்படம்

இங்கிலாந்தில் ஓடும் வாடகை காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, அந்த கார் நிறுவனம் அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். ஏற்கனவே 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் கார் ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

இதனிடையே ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாராவுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டுமென பாராவுக்கு அந்த வாடகை கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story