இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விடுமுறையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் போரிஸ் ஜான்சன்


இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விடுமுறையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்  போரிஸ் ஜான்சன்
x

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் இன்று இங்கிலாந்து திரும்பினார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பொருளாதார பிரச்சினைகளால், சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு, அழுத்தம் காரணமாக பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக இந்த வாரம் திடீரென அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்து வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.குறைந்தது 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளவர்தான் போட்டி போட முடியும். கன்சர்வேடிவ் கட்சிக்கு 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ள நிலையில் 3 பேர் களம் இறங்க முடியும். இதற்கான கால அவகாசம் வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை உள்ளது.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என எந்த தலைவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருவதாக லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கள நிலவரப்படி இந்திய வம்சாவளி ரிஷி சுனக் 100 எம்.பி.க்கள் ஆதரவை பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் எம்.பி.க்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது மற்றும் பெண் தலைவரான அமைச்சரவை உறுப்பினர் பென்னி மோர்டான்ட்டும் தேர்தலில் களம்காண எம்.பி.க்கள் ஆதரவை கேட்டுள்ளார். ஆனால் மற்ற இருவரை விட அவர் ஏற்கனவே பின்தங்கியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு 3 பேர் போட்டியில் இறங்கினால், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் முதலில் ஓட்டு போடுவார்கள். 3 பேரில் குறைவான ஓட்டு பெற்ற ஒருவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார். இதற்காக கன்சர்வேடிவ் கட்சியின் 357 எம்.பி.க்கள் திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடத்துகின்றனர்.

2 வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். 2 பேரில் தங்களது முன்னுரிமை யார் என்று கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அடையாளம் காட்டுவார்கள். அதன்பின்னர் அவர்கள் ஆன்லைன் வழியாக ஓட்டு போடுவார்கள். இதில் வெற்றி பெறுகிறவர், கன்சர்வேடிவ் கட்சித்தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு பெறுவார்.

இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அரசியல் மறுபிரவேசத்தை தொடங்கிட தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் இன்று இங்கிலாந்து திரும்பினார்.

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் போரிஸ் ஜான்சன் போட்டியிடுவதை எதிர்த்துள்ளார். அவர் கூறுகையில், "நாம் முன்னோக்கி செல்ல வேண்டும், பின்னோக்கி செல்லக்கூடாது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பொருளாதார அனுபவம் வாய்ந்த தனித்துவமான வேட்பாளர்" என்று கூறினார்.

1 More update

Next Story