அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியீடு


அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 15 July 2023 5:13 AM GMT (Updated: 15 July 2023 6:12 AM GMT)

அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு 40 நாட்கள் கழித்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பஹொடா,

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா உள்பட பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் அமேசான் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியா தனது 4 குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மே மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம்.

அமேசான் அடர் வனப்பகுதியில் சென்றபோது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, மக்டலினா மெகுடி வெலென்சியா உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக 13 வயது, 9 வயது, 4 வயது, 11 மாத கைக்குழந்தை ஆகிய 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி உள்பட 3 பேரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை என்ன? என தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அமேசான் காடு பற்றி அறிந்த 70 பழங்குடியினர் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

40 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகள் ஜூன் 10-ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மிகுந்த உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் பஹொவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் தற்போது குழந்தைகள் உடல்நலம் பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விபத்தில் பலியான பழங்குடியின தலைவி மக்டலினா மெகுடி வெலென்சியாவின் கணவர் அவரை விட்டு விலகி வெறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர் மெகுடியின் குழந்தைகளை கவனித்து வருகிறார். குழந்தைகள் அனைவரும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story