ஆஸ்திரேலியா: பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி


ஆஸ்திரேலியா: பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி
x

இந்த விபத்து, விக்டோரியா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் துயரமான சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் விக்டேரியா மாநிலம் பிலிப் தீவுக்கு நேற்று வந்திருந்த ஒரு குழுவினர் கடற்கரையில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். கடலில் குளித்து மகிழ்ந்தனர். பிற்பகல் 4 பேர் கடற்பகுதியில் உள்ள குகைகளுக்கு அருகே உள்ள தண்ணீரில் இறங்கினர். ஆனால் ஆழமான பகுதியில் சிக்கிய அவர்களால் வெளியே வர முடியவில்லை. நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

அப்போது, ஓய்வு நேரத்தில் அங்கு சர்பிங் செய்துகொண்டிருந்த உயிர்காக்கும் வீரர்கள் (பணியில் இல்லை) விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 3 பேரை வெளியே இழுத்து கொண்டு வந்தனர். பின்னர் மேலும் சில உயிர் காக்கும் வீரர்கள் படகில் வரவழைக்கப்பட்டு நான்காவது நபர் மீட்கப்பட்டார். அனைவருக்கும் சிபிஆர் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 வயது நிரம்பிய பெண்ணுக்கு உயிர் இருந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் ஜெகஜீத் சிங் ஆனந்த், சுகானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி என்பதும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 23 வயது நிரம்பிய ஜெகஜீத் சிங் ஆனந்த் மெல்போர்னில் செவிலியராக வேலை பார்த்தார். அவர் ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர். 20 வயது நிரம்பிய சுகானி ஆனந்த், கீர்த்தி பேடி ஆகிய இரு பெண்களும் மாணவர் விசாவில் வந்து படித்துக்கொண்டிருந்தனர். விடுமுறையில் அவர்களை பார்ப்பதற்காக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரீமா சோந்தி (வயது 40) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்துள்ளார். 4 பேரும் கடலில் மூழ்கி இறந்திருப்பது அவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த விபத்து விக்டோரியா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் துயரமான சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story