வீட்டுக்கு போ...!! - போராட்டக்காரர்கள்; செல்வதற்கு வீடு இல்லை - ரணில் விக்ரமசிங்கே


வீட்டுக்கு போ...!! - போராட்டக்காரர்கள்; செல்வதற்கு வீடு இல்லை - ரணில் விக்ரமசிங்கே
x

இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்லும்படி ரணில் விக்ரமசிங்கேவை போராட்டக்காரர்கள் வலியுறுத்திய நிலையில் செல்வதற்கு வீடு இல்லை என அவர் கூறியுள்ளார்.



கொழும்பு,



இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்ல கூடிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார்.

எனினும், மக்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இலங்கையில் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படவில்லை. அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கண்டி நகரில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சிலர் நான் வீட்டுக்கு போக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த போகிறோம் என அச்சுறுத்தல் விடுகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் போராட்டம் எதிலும் ஈடுபட வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்வதற்கு வீடு எதுவும் இல்லை.

என்னை வீட்டுக்கு போகும்படி வலியுறுத்துவது என்பது நேரம் வீணடிக்கும் செயல். அதற்கு பதிலாக, போராட்டக்காரர்கள் எரிந்து போன எனது வீட்டை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, வீடு எதுவும் இல்லாத ஒருவரிடம் சென்று வீட்டுக்கு போகும்படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது வீடு மீண்டும் கட்டப்பட்ட பின்னர், போராட்டக்காரர்கள் என்னிடம் வீட்டுக்கு செல்லும்படி வலியுறுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.

ஒன்று போராட்டக்காரர்கள் நாட்டை கட்டியெழுப்பவோ அல்லது எனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்பவோ செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் போராட்ட சூழலால் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறுவதற்கான சாத்தியப்பட்ட ஒப்பந்தம் தள்ளி போய் கொண்டே இருக்கிறது என சுட்டி காட்டிய ரணில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டெழுவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றி நிரந்தர தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Next Story