11 பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் சரமாரி ராக்கெட் வீச்சு


11 பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் சரமாரி ராக்கெட் வீச்சு
x

11 பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் சரமாரி ராக்கெட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.

டெல்அவிவ்,

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக இந்த மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகருக்குள் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து கடும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் படை அங்கு நுழைந்தது முதல் பயங்கரமான குண்டுவெடிப்பு சத்தமும், துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இது இனப்படுகொலை என பாலஸ்தீனிய மூத்த அதிகாரி உசேன் அல் ஷேக் கூறி, கண்டனம் தெரிவித்தார். பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், " இந்த ஆபத்தான தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசுத்தான் பொறுப்பேற்க வேண்டும், இது பிராந்தியத்தை பதற்றத்தை தோக்கி தள்ளுகிறது" என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் நேற்று ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, " பாலஸ்தீனிய போராளிகள் காசா முனையில் இருந்து இஸ்ரேல் நோக்கி 6 ராக்கெட்டுகளை வீசினர். இந்த ராக்கெட்டுகள் ஆஷ்கெலான் மற்றும் ஸ்டெரோட் நகரங்களை நோக்கி வீசப்பட்டன. அவற்றில் 5 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு வழிமறித்து அழித்தது" என தெரிவித்தது.

இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் விமானம், மத்திய காசா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.


Next Story