இம்ரான்கானுக்கு மீண்டும் கமாண்டோ படை பாதுகாப்பு


இம்ரான்கானுக்கு  மீண்டும்  கமாண்டோ படை பாதுகாப்பு
x

இம்ரான்கான் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் காரணமாக கமாண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வாரம் வாஜிரிபாத் நகரில் நடந்த போராட்ட பேரணியில் கலந்து கொண்டபோது அவரை கொல்ல முயற்சி நடந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது காலில் குண்டு பாய்ந்து படுகாயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கூட்டணி ஆட்சி நடந்தாலும், அந்த கட்சி, பஞ்சாப் மாகாண போலீசை நம்பவில்லை.

இதன் காரணமாக இம்ரான்கானுக்கும், அவரது மகன்களுக்கும் கைபர் பக்துங்குவா மாகாண போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபற்றி இம்ரான்கான் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், "இம்ரான்கான் மற்றும் அவரது மகன்களின் தனிப்பட்ட பாதுகாப்பை கைபர் பக்துங்குவா மாகாண போலீஸ்துறையின் சிறப்பு கமாண்டோக்கள் குழு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது" என கூறின.

இம்ரான்கானுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் தங்கள் தந்தையை சந்திக்க அங்கு வந்துள்ளனர்.

இம்ரான்கானின் ஜமான் பார்க் இல்லத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இல்லத்துக்கு வெளியே மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் பிளாக்குகள் கொண்டு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியின் உள்துறை விவகார அந்தரங்க உதவியாளர் உமர் சர்பிராஸ் சீமா கூறுகையில், "இம்ரான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.


Next Story