இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்க ஊக்கத்தொகை - மத்திய மந்திரி அறிவிப்பு


இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்க  ஊக்கத்தொகை - மத்திய மந்திரி அறிவிப்பு
x

image courtesy: ANI

இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

கேன்ஸ்,

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில் ஜூரி உறுப்பினர்களில் ஒருவராக நடிகை தீபிகா படுகோனே இருந்தார். இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் தடம் பதித்த இந்திய நட்சத்திரக் குழுவை சிவப்பு கம்பளத்தில் வழிநடத்தினார்.

கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். அப்போது இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக 2 திட்டங்களை அவர் அறிவித்தார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக தயாரிப்பதற்கு ரூ.2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களுக்கான படப்பிடிப்புகளை இந்தியாவில் நடத்துவோருக்கு, ரூ.2.5 கோடி வரையிலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதாவது, கூட்டாக படம் தயாரிக்கும் சர்வதேச திரைப்பட நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்படக்கூடிய தகுதி வாய்ந்த செலவினத்தில் 30% வரை திரும்பப் பெறலாம். வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கு 5% ஊக்கத்தொகை அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் கூடுதலாக (65,000 அமெரிக்க டாலர்) திரும்பப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய சினிமாவில் காணப்படும் படைப்பாற்றல், உயர் சிறப்புத் திறன் மற்றும் புதுமைகள், சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்றும் அவர் கூறினார். இந்தியத் திரைப்படத்துறை, சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்த்திருப்பதுடன், 2022-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த காலக்கட்டமாக மாற்றியிருப்பதாகவும் மத்திய மந்திரி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் ஓடிடி தளங்கள் இந்தியத் திரைப்படத்துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, இதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது சர்வதேச மற்றும் இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்றார்.

படைப்பாற்றல் மிக்க இந்த தொழிலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், 53-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான அதிகாரபூர்வ சுவரொட்டியையும், அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.


Next Story