ஹமாஸ் தலைவர்களுடன் ஈரான் தலைவர் சந்திப்பு; இலக்குகளுக்கு உதவ ஒப்புதல்


ஹமாஸ் தலைவர்களுடன் ஈரான் தலைவர் சந்திப்பு; இலக்குகளுக்கு உதவ ஒப்புதல்
x
தினத்தந்தி 15 Oct 2023 7:20 AM GMT (Updated: 15 Oct 2023 10:36 AM GMT)

ஹமாஸ் தலைவர்களை சந்தித்த ஈரான் வெளியுறவு மந்திரி, அவர்கள் இலக்கை அடைய முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த சூழலில், ஈரானின் வெளியுறவு மந்திரி உசைன் அமீர்அப்துல்லாஹியான், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை நேற்றிரவு சந்தித்து பேசினார். இதுபற்றி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய பின்னர் ஈரானுடனான ஹனியேவின் முதல் சந்திப்பு இது.

இந்த சந்திப்பின்போது, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் இலக்குகளை முழு அளவில் அடைய தொடர்ந்து ஒத்துழைப்பது என இருவரும் ஒப்பு கொண்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில் ஹனியே, இந்த போருக்கு பின் ஒரு புதிய வரலாறு படைக்கப்படும். அது, இதற்கு முன் இல்லாத வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.

இதேபோன்று ஈரான் தலைவர் உசைன், தெற்கு இஸ்ரேலில் குடிமக்கள் மற்றும் வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி, கொலை செய்யும் நிகழ்வை பெருமைக்குரியது என குறிப்பிட்டு உள்ளார் என்று ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்னால் ஈரானின் தொடர்பு உள்ளது என இஸ்ரேல் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தது கவனிக்கத்தக்கது. இதனை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலானும் கூறினார். அவர்களின் திட்டம் பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால், ஹமாஸ் அமைப்பினருக்கு நீண்டகால பயிற்சி அளித்து, படைகளை கட்டமைத்து வந்தனர் எனவும் கூறியுள்ளார்.


Next Story