இஸ்ரேல் வெளியுறவு மந்திரியின் 3 நாள் சுற்றுப்பயணம் குறைப்பு... தூதர் விளக்கம்


இஸ்ரேல் வெளியுறவு மந்திரியின் 3 நாள் சுற்றுப்பயணம் குறைப்பு... தூதர் விளக்கம்
x
தினத்தந்தி 9 May 2023 4:56 PM GMT (Updated: 9 May 2023 5:03 PM GMT)

இஸ்ரேல் வெளியுறவு மந்திரி 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில், இன்றே நாடு திரும்பும் முடிவை டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

டெல்அவிவ்,

இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹென் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு, அதன்படி டெல்லிக்கு இன்று வந்தடைந்து உள்ளார். புதுடெல்லி, ஆக்ரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு 9 முதல் 11 வரையிலான நாட்களில் செல்ல பயண திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தியது. அதில், பாலஸ்தீன நாட்டில் உள்ள, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பி.ஐ.ஜே.) என்ற இயக்கத்தின் 3 முக்கிய தலைவர்களான ஜிகாத் அல்-கன்னம், கலீல் அல்-பாதினி மற்றும் டாரீக் இஜ் அல்-தீன் ஆகிய 3 பேரும், அவர்களது மனைவிகள் மற்றும் பல்வேறு குழந்தைகளும் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற தகவல் தெரிய வந்தது. அவர்கள் உள்பட 12 பேர் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

இதனால், மந்திரி கோஹென் டெல்லி வந்திறங்கியதும் அவருக்கு உடனடியாக பாதுகாப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக நாடு திரும்பும் முடிவை டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவர் கிலான் கூறும்போது, காசா நிலைமையை முன்னிட்டு, இந்த பயணம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணம் நன்றாக அமைந்திருந்தது.

இந்திய வெளியுறவு துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு மந்திரி, பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய 4 பேருடனான முக்கிய கூட்டங்களை அவர் நடத்தி உள்ளார். இந்த சந்திப்புகளில், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே காணப்படும் நெருங்கிய மற்றும் நல்லுறவு பிரதிபலித்தது.

இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியாவுக்கு வருகை தருவது என்று ஒரு திட்டம் உள்ளது. அந்த நேரத்தில் பல விசயங்கள் மேற்கொள்ளப்படும் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story