இஸ்ரேல், பாலஸ்தீனம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்


இஸ்ரேல், பாலஸ்தீனம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்:  இந்தியா வலியுறுத்தல்
x

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வு ஒன்று எட்டப்பட, இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய அவசர தேவை உள்ளது என இந்தியா வலியுறுத்தி உள்ளது.



நியூயார்க்,



இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. எனினும், கடந்த ஓராண்டாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது. 3 நாட்களாக நடைபெற்ற ஆபரேசன் பிரேக்கிங் டான் மூலம், கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது.

ஆனாலும், இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் தாக்குதல்கள் குறித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. மீண்டும் தாக்குதல் தொடங்கினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூட்டத்தில் ஐ.நா கூறியது.

இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் பேசுகையில், இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பையே சேரும் என்று குற்றம் சாட்டினார். அவர்கள் காசா பகுதியில் வசிக்கும் மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்த அமைப்பு போர் குற்றங்கள் புரிந்தது. அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு என்று கூறினார். மேலும் அவர்கள் இஸ்ரேல் பொதுமக்களை குறி வைத்து ராக்கெட் ஏவுகணைகளை ஏவினர். இது இரட்டிப்பு போர் குற்றமாகும் என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நாட்டின் ஐ.நா. பிரதிநிதி பேசினார். ஆனால் இதற்கு பாலஸ்தீன தூதர் மறுப்பு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய கம்போஜ், ஓராண்டாக அமைதி நிலவிய நிலையில், காசாவில் மீண்டும் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. இது வருத்தத்திற்குரிய விசயம். சமீபத்திய மோதல்களால், மீண்டும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதன் விளைவாக, விலைமதிப்பில்லா குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. பலர் காயமடைந்தும், மனதளவில் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

ஐ.நா. அமைப்பு மற்றும் எகிப்து ஆகியவை தூதரக அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நிலைமை கட்டுக்குள் இல்லாமல் மீறி சென்று விடாத வகையில், பதற்றம் தணியும் சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. மற்றும் சர்வதேச சமூக உறுப்பினர்களின் தூதரக அளவிலான முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். காசா பகுதியில் பகைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்தும் அதே சூழலில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வு ஒன்று எட்டப்பட, இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய அவசர தேவை உள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

நேரடி மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறாமல் போனால், அது நம்பிக்கை குறைந்து போதலை அதிகப்படுத்துவதுடன், வருங்காலத்தில் இதுபோன்ற மோதல்கள் ஏற்பட வழியேற்படுத்தும் என்றும் கம்போஜ் கூறியுள்ளார்.


Next Story