இஸ்ரேல்: இளம்பெண் உடலை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து சென்ற கொடூரம்


இஸ்ரேல்:  இளம்பெண் உடலை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து சென்ற கொடூரம்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:26 AM GMT (Updated: 9 Oct 2023 1:02 AM GMT)

இஸ்ரேல் தெருவில் ஜெர்மன் இளம்பெண் உடலை நிர்வாண கோலத்தில் வண்டியில் வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இழுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

டெல் அவிவ்,

காசா மற்றும் இஸ்ரேல் எல்லையையொட்டிய கிராமப்புற பண்ணை நிலத்தில் கடந்த சனிக்கிழமை நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி அதற்காக நடத்தப்பட்ட இசை திருவிழாவில் ஷானி லூக் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண், தோழியுடன் சென்று கலந்து கொண்டுள்ளார்.

இதில், அவர்கள் நடனம் ஆடி, உணவு உண்டு, குடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்தது. எனினும், இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்து உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. காசா பகுதியிலும் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இருதரப்பிலும் சேர்த்து 1,000 பேர் கொல்லப்பட்டு இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் நடந்ததும், இசை திருவிழாவில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடியுள்ளனர். அவர்களில் ஷானியும் ஒருவர்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவரின் நிர்வாண கோலத்திலான உடலை பயங்கரவாதிகள், ஜீப் ஒன்றின் பின்புறம் வைத்து ஓட்டி செல்லும் வீடியோ வைரலானது. அந்த உடலின் மீது சிலர் எச்சிலை துப்பும் காட்சிகளும் காணப்படுகின்றன.

அந்த இளம்பெண், இஸ்ரேல் ராணுவத்தின் வீராங்கனை என பயங்கரவாதிகள் கூறினர். ஆனால், அவர் இளம்பெண் லூக் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.

இதனை ஷானியின் உறவினரான தொமசினா லூக் உறுதிப்படுத்தி உள்ளார். இதேபோன்று, ஷானியின் சகோதரியான அதி லூக்கும் அந்த இளம்பெண் ஷானி என உறுதிப்படுத்தி உள்ளார். ஜெர்மனி நாட்டவரான ஷானி பச்சை குத்தும் கலைஞராக இருந்து வந்துள்ளார். யூத பெண்ணான அவரது உடலை இஸ்ரேல் தெருக்களின் வழியே, பயங்கரவாதிகள் வண்டியில் எடுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஆனால், இது எதுவும் தெரியாமல் தனது மகளின் புகைப்படம் ஒன்றை வைத்து கொண்டு ஷானியின் தாயாரும் அவரை பற்றிய தகவல் எதுவும் உண்டா? என கவலையுடன் பிறரிடம் கேட்டு வருகிறார்.


Next Story