இஸ்ரேல் போர் தொடரும்: அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்


இஸ்ரேல் போர் தொடரும்:  அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்
x

அமெரிக்க செனட் உறுப்பினரான ஜான் பேர்ரஸ்சோ, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

டெல் அவிவ்,

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் முனைப்பில் உள்ள இஸ்ரேல் ரபா நகரை முற்றுகையிடும் முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, நாங்கள் ரபா நகருக்கு செல்வோம். போரில் இருந்து நாங்கள் விலக போவதில்லை என்றார்.

எனினும், அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியின்போது, உயிரிழப்புகளை குறைக்க தவறிய நெதன்யாகு, இஸ்ரேலுக்கு உதவுவதற்கு பதிலாக கூடுதலாக வலியை ஏற்படுத்தி வருகிறார்.

என்னுடைய பார்வையில் இதனை கூறுகிறேன். இது இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு முரணானது. அது ஒரு பெரிய தவறு என்றே நான் நினைக்கிறேன் என்று சர்வதேச நிலைப்பாட்டின் மீது இஸ்ரேல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு தன்னுடைய கவலையை பைடன் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காணொலி காட்சி வழியே குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றும்போது, காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்களை வீழ்த்தும் இஸ்ரேல் அரசின் முயற்சிகள் தொடரும் என்று உறுதிப்பட கூறினார்.

பாலஸ்தீனிய மக்கள் வசிக்கும் பகுதியை முற்றுகையிட்டு, மனிதாபிமான உதவிகள் செய்வதில் நெருக்கடி அதிகரித்து உள்ளது என ஜனநாயக கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், நெதன்யாகு இதனை கூறியுள்ளார்.

இதுபற்றி செனட் உறுப்பினரான ஜிம் ரிஸ்க் கூறும்போது, நெதன்யாகு என்ன கூறினாரோ, அதனை செய்ய போகிறார். அவர் கூறிய விசயங்களை முடித்து விட இருக்கிறார் என்று கூறினார்.

இதேபோன்று மற்றொரு செனட் உறுப்பினரான சக் ஷூமர் சமீபத்தில் நெதன்யாகுவை விமர்சித்து பேசும்போது, அவருடைய அரசின் கொள்கைகளால், அமைதிக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. அதிலும், காசாவுக்கான உதவி வழங்குவதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது.

அரசின் அபாய மற்றும் கோபமூட்ட கூடிய கொள்கைகளால், இஸ்ரேலை இனியும் ஆட்சி செய்ய நெதன்யாகு தகுதியற்றவராகிறார். அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியிலேயே அவருக்கு எதிராக அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது. இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற அரசியல் மற்றும் ராணுவ உதவியை நிறுத்தும்படியும் நெருக்கடி வலுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், செனட் உறுப்பினர்கள் வட்டாரத்தில் நெதன்யாகுவுக்கு ஆதரவு காணப்படுகிறது. செனட் உறுப்பினரான ஜான் பேர்ரஸ்சோ, ஷூமர் குறிப்பிட்டவற்றை விமர்சித்ததுடன், இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று உறுதியாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

5 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story