கொரோனா பாதிப்புகளால் நீண்டகால அச்சுறுத்தல்; ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை


கொரோனா பாதிப்புகளால் நீண்டகால அச்சுறுத்தல்; ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
x

கொரோனா பாதிப்புகளால் நீண்டகால அச்சுறுத்தல் இருக்கும் என ஆஸ்திரேலிய சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



மெல்போர்ன்,



உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்தும் நோக்கிலான பணிகளும் நடந்து வருகின்றன.

இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்டகால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலை கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் கூறும்போது, கொரோனா பாதிப்புகளை பற்றி எளிதில் நாம் புறந்தள்ளி விடலாம். ஆனால், ஆஸ்திரேலியர்களில் 5 சதவீதம் பேருக்கு இதன் அறிகுறிகளால் நீண்டகால பாதிப்புகள் இருக்கும் என எடுத்து கொண்டால் கூட, ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் பேரை பற்றி நாம் பேசி கொண்டிருக்கிறோம் என அர்த்தம்.

நீண்டகால கொரோனா பாதிப்புகளில் பல விசயங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றபோதிலும், அதன் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். அந்நாட்டு சுகாதார மந்திரி மார்க் பட்லர் கடந்த ஜூனில் கூறும்போது, அடுத்த சில ஆண்டுகளில் நீண்டகால கொரோனா பாதிப்புகளை கொண்ட மக்களின் மிக பெரிய அலையை நாட்டில் எதிர்பார்க்கலாம் என கூறினார்.

கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளுக்கான அறிகுறிகளை கொண்டிருக்கும் 14 லட்சம் பேர் வரை நினைவு வைத்து கொள்ளுதலில் சிக்கல், மனநிலை தெளிவில்லாமை, கவனம் செலுத்த முடியாமை உள்ளிட்டவையும், மயக்கம் அல்லது தலை வலி ஆகியவற்றை கொண்டிருக்க கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது என மந்திரி மார்க் பட்லர் கூறினார்.

இந்த பல்வேறு சிக்கலான அறிகுறிகள், நீண்டகால கொரோனா பாதிப்புகளை இன்னும் கடினம் ஆக்குகிறது. இதனால், நீண்டகால கொரோனாவை கண்டறிவது, ஆய்வு செய்வது மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதும் சிக்கலாகிறது. ஏனெனில், அதற்கான சிகிச்சைக்காக ஒற்றை பரிசோதனை முறை கூட இல்லை.

ஆனால், நீண்டகால கொரோனாவின் ஆபத்துகளை குறைக்கும் பணியை தடுப்பூசி செய்யும் என வார்க் கூறியுள்ளார். சுகாதார நிபுணர்கள், கொரோனாவின் நீண்டகால பாதிப்பு மேலாண்மை பணிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருப்பதுடன், அன்றைய நிலவரங்களை தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும். லேசானது முதல் கடுமையான அறிகுறிகளை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த பொறுப்பும் அவர்களுக்கு அவசியப்படுகிறது என்று வார்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீண்டகால கொரோனா சிகிச்சைக்கான அதிகளவிலான கிளினிக்குகள் மற்றும் நிபுணர்களை அரசு வழங்க வேண்டிய தேவை வருங்காலத்தில் உள்ளது என கூறியுள்ள வார்க், அனைத்து சூழ்நிலைகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான சிறந்த வழிகள் நமக்கு தெரியாது என்றபோதிலும், நிச்சயம் இதனை நாம் புறந்தள்ளி விட முடியாது என்று கூறியுள்ளார்.


Next Story