அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த விவகாரம்.. ரஷியா அதிரடி முடிவு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்


அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த விவகாரம்.. ரஷியா அதிரடி முடிவு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
x

விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்திற்கு அளித்த அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதும் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் போடப்பட்டது. ஐ.நா. பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, முக்கிய 8 நாடுகள் அங்கீகரிக்காததால் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷியா முடிவு செய்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது, உலகளாவிய பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவின் பொறுப்பற்ற அணுகுமுறை காரணமாக விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்திற்கு அளித்த அங்கீகாரத்தை ரஷியா திரும்பப் பெறுவதாக சபாநாயகர் தெரிவித்தார். மசோதாவை ஆதரித்து உறுப்பினர்கள் பேசினர்.

விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி மேல் சபையின் (பெடரல் கவுன்சில்) ஒப்புதலை பெற வேண்டும். மேல் சபையில் அடுத்த வாரம் மசோதா மீது விவாதம் நடைபெறும். மேல்சபை உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளதால் மேல்சபையிலும் மசோதா எளிதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ ஆதரவை வழங்கியதால் அதிருப்தி அடைந்த ரஷியா, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்ற கவலைகள் ஏற்கனவே எழுந்தன. அப்போது புதின் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் இந்த மாத துவக்கத்தில் இதுபற்றி பேசிய புதின், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டும் அங்கீகாரம் அளிக்காத அமெரிக்காவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ரஷியாவும் அங்கீகாரத்தை திரும்ப பெறும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story