பிரதமர் மோடி உரையாற்றும் 'மனதின் குரல்' 100-வது நிகழ்ச்சி - ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு


பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி - ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு
x

கோப்புப்படம்

பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

நியூயார்க்,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. காலை 11:00 முதல் 11:30 மணி வரை ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றுவார். அது, 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட உள்ளது.

இது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "மனதின் குரல் ஒரு மாதாந்திர தேசிய பாரம்பரியமாக மாறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க கோடிக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது பகுதி ஏப்ரல் 30-ந் தேதி ஐ.நா. தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை செய்யப்பட உள்ளதால், ஒரு வரலாற்று தருணத்திற்கு தயாராகுங்கள். இந்தியாவில் காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி இந்த நியூயார்க்கில் அதிகாலை 1.30 மணிக்கு ஒலிபரப்பாகும்" என கூறப்பட்டுள்ளது.


Next Story