சீனாவின் கடல் பரப்பின் மீது பறந்த மர்ம பொருள்; சுட்டு வீழ்த்த முடிவு


சீனாவின் கடல் பரப்பின் மீது பறந்த மர்ம பொருள்; சுட்டு வீழ்த்த முடிவு
x

அமெரிக்காவில் சீன உளவு பலூன் விவகாரம் பரபரப்பு அடங்குவதற்குள் சீனாவின் கடல் பரப்பின் மீது மர்ம பொருள் பறந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



பீஜிங்,


அமெரிக்காவில் கனடா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மொன்டானா மாகாணத்தின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த வெள்ளை நிற ராட்சத பலூன் கடந்த 4-ந்தேதி போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் சீனா அனுப்பிய உளவு பலூன் என்றும், பல ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சீனா பலூன் மூலம் உளவு பார்த்ததாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சீனா, அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது, உளவு பலூன் அல்ல என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் வழித்தவறி அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறியது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40,000 அடி உயரத்தில் மர்ம பொருள் ஒன்று பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அந்த மர்ம பொருளை அமெரிக்கா போர் விமானம் ஏவுகணையை வீசி வீழ்த்தியது.

அமெரிக்காவை தொடர்ந்து, அதன் அண்டை நாடான கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யூகோன் பிராந்தியத்தின் வான்வெளியில் பல ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்து கொண்டிருக்கிறது என கனடா ராணுவம் உறுதி செய்தது.

அதனை தொடர்ந்து அந்த மர்ம பொருளை உடனடியாக சுட்டு வீழ்த்த அந்த நாட்டின் அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டார். அதன்படி அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில், தி பேப்பர் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீனாவின் குயிங்டாவோ நகரமருகே கடல் பரப்பின் மேலே அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்து சென்று உள்ளது. இதனை தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்த அதிகாரிகள் தயாராகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி குயிங்டாவோ ஜிமோ மாவட்டத்தின் கடல் வளர்ச்சி கழகத்தின் பணியாளர் ஒருவர் கூறும்போது, அந்த மர்ம பொருளை வீழ்த்துவதற்கு தொடர்புடைய அதிகாரிகள் தயாராகி கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என ஊழியர் கூறியுள்ளார் என்று செய்தி நிறுவன தகவல் தெரிவிக்கின்றது.


Next Story