சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்


சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
x
தினத்தந்தி 31 Jan 2023 9:52 AM GMT (Updated: 31 Jan 2023 9:58 AM GMT)

5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.



புதுடெல்லி,

சூரிய குடும்பத்தின் மையத்தில் பிரகாச ஒளியுடன் சூரியன் உள்ளது. நட்சத்திரம் வகையை சேர்ந்த அதனை 8 கோள்கள் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

இவற்றில், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆற்றலை சூரியன் வழங்கி வருகிறது. பிற கோள்களில் உயிரினங்கள் வாழ கூடிய அமைப்புகள் காணப்படவில்லை. ஏனெனில், சூரியனின் மிக அருகே உள்ள கோள்கள் அதிக வெப்பநிலையில் உள்ளன.

தொலைதூர கோள்கள் சூரியனின் வெப்பம் கிடைக்க பெறாத நிலையில் குளிர்ச்சியுடன் உள்ளன. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியசாக உள்ளது. ஆனால், சூரியனின் புறஅடுக்கில் உள்ள கரோனா எனப்படும் கதிர்வீச்சுகள் லட்சக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கொண்டுள்ளது.

வி.எல்.இ.சி. உபகரணம்




இதுபோன்ற, சூரியனின் மறைந்திருக்கும் பல்வேறு ரகசியங்களை அறியும் நோக்கில் இந்தியாவில், ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் தயாராகி வருகிறது. இதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவுடன் இணைந்து இஸ்ரோ கட்டமைத்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு இதற்கான முதல்கட்ட சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஆதித்யா எல்-1 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் மூலம் சூரியனுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நடப்பு ஆண்டின் மத்தியில் விண்கலம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும். மேலும் சூரியனுடைய வெளி அடுக்கு மற்றும் அருகாமை புற ஊதாக்கதிர்களை ஆய்வு செய்வதே முக்கிய நோக்கம் ஆகும்.




சூரியனில் உள்ளடுக்கு, புற அடுக்கு என 2 அடுக்குகள் உள்ளன. இவற்றில் உள்ளடுக்குகளை பல்வேறு உபகரணங்கள் கொண்டு ஆய்வு செய்த நிலையில், புற அடுக்கில் உள்ள விசயங்களை புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இதற்காக வி.எல்.இ.சி. எனப்படும் உபகரணம் போன்ற அமைப்பு ஒன்று இஸ்ரோவுக்கு கடந்த குடியரசு தினத்தன்று கிடைக்க பெற்று உள்ளது. இந்த வி.எல்.இ.சி. அமைப்பு, புறஅடுக்கு பற்றி கவனம் செலுத்தும்.

அந்த அடுக்கில் உள்ள கரோனா எனப்படும் வாயு நிலையிலான பகுதியானது, சூரியனின் மேற்பரப்பில் இருந்து 2,100 கி.மீ.க்கு தொலைவில் இருந்து தொடங்குகிறது. இதன் வெப்பநிலை 5 லட்சம் டிகிரி செல்சியசுடன் காணப்படுகிறது. இந்தளவுக்கு வெப்பநிலை வெளிப்படுவதற்கான காரணம் விஞ்ஞானிகளால் அறியப்படாமல் உள்ளது.

அதனால், இந்த கரோனா பகுதியின் காந்தபுல பண்புகள் பற்றி ஆய்வு செய்யப்படும். இந்த காந்தபுலங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலே, கரோனாவில் இருந்து பெருமளவில் ஆபத்து நிறைந்த கதிர்வீச்சுகள் வெளிப்படும் காரணியாக உள்ளது.

சூரியனில் இருந்து வெளிப்படும் இவை, கோடிக்கணக்கான டன்கள் எடையுடன், விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன. அது பூமியையும் தாக்க கூடும். சில சமயங்களில் செயற்கைக்கோள்களுக்கும் கூட பாதிப்பு ஏற்படுத்தும்.

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருக்கும்போது, கரோனாவின் வெப்பநிலை எப்படி லட்சக்கணக்கான டிகிரி அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது என்று அறிவதற்கான தகவல்களையும் சேகரிக்கும்.

இதற்காக தொடர்ச்சியாக கரோனாவை கண்காணிக்கும் பணியில், இந்த வி.எல்.இ.சி. அமைப்பு செயல்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதுபற்றி இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் பேராசிரியர் திவ்யந்து நந்தி கூறும்போது, இந்த அமைப்பை இந்தியா முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் சூரிய இயற்பியலாளர்கள் இணைந்து கடுமையாக பணியாற்றி உருவாக்கி உள்ளனர்.

இதனால், விண்வெளியில் நிலவும் வானிலை பற்றி சிறந்த முறையில் முன்பே கணிக்க உதவும். அதற்கேற்ப நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள முடியும். ஒருவேளை சூரியனிடம் இருந்து ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு கரோனா கதிர்வீச்சுகள் வெளியேறினால், விண்வெளியில் உள்ள நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும். அதற்கான கணிப்பை மேற்கொள்ள இந்த கரோனாகிராப் உதவி புரியும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story