கனடா பொதுத்தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை.. விசாரணையில் வெளியான உண்மை


கனடா பொதுத்தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை.. விசாரணையில் வெளியான உண்மை
x

பிற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியது. இந்த இரண்டு தேர்தல்களிலும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. இதேபோல் கனடா தேர்தலில் சீனாவின் பங்கு இருக்கலாம் என ஊடக தகவல்களை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் ட்ரூடோ ஒரு ஆணையத்தை அமைத்தார்.

இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் விசாரணை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், கனடாவின் அரசியலில் இந்தியா தலையிட முயற்சிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

2021 தேர்தலை கண்காணித்த மூத்த அதிகாரிகள் குழுவிடம், வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. 2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

அதேசமயம், கனடாவில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் சீனா தலையிட்டதாக புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று விசாரணைக் குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.

தேர்தலில் தலையிட முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை இந்தியா ஏற்கனவே மறுத்தது. பிற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதற்கு முன்பு, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த விசாரணையானது, இந்தியா-கனடா உறவுகளில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story