ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்


ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்
x

வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிர வைத்தது.

வடகொரியா ராணுவ தினம்

வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இன்னொரு பக்கம், அங்கு கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.இந்த நிலையிலும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து வருகிற வடகொரியா, நேற்று தனது ராணுவத்தை நிறுவிய 75-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது.

நள்ளிரவில் ராணுவ அணிவகுப்பு

இதையொட்டி பியாங்யாங் நகரில் நள்ளிரவில் மிகப்பெரிய அளவில் நீண்ட தொலைவு ஏவுகணைகளுடன்கூடிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்திக்காட்டியது. இந்த அணிவகுப்பில் இதுவரை இல்லாத அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மிகப்பெரிய அளவில் வடகொரியா வரிசைப்படுத்திக் காட்டியது. ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையிலான இத்தகைய ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இது உலக அரங்கை அதிர வைத்ததுடன், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு சவால் விடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகளுடன் பார்வையிட்டார் கிம்

இந்த அணிவகுப்பினை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தனது மகள் கிம் ஜூயேவுடன் பார்வையிட்டார். இந்த அணிவகுப்பில் கிம் ஜூயே காணப்பட்ட விதம், அவர் தந்தை கிம் ஜாங் அன்னின் அடுத்த வாரிசாக இருக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த அணிவகுப்பில் காட்டப்பட்டுள்ள நீண்ட தொலைவு பாய்ந்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளின் எண்ணிக்கை உலக அரங்கில் சற்றே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தவை என நம்பப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றும் அணுக்குண்டுகளை சுமந்து சென்றால், அது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை முறியடிக்கக்கூடும் என போர் ஆயுத, தளவாட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

படங்கள் வெளியீடு

இந்த அணிவகுப்பு பற்றிய கூடுதல் விவரங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த இத்தகைய ஆயுதங்கள், தளவாடங்கள் நாட்டின் வலிமையான போர் தடுப்பு மற்றும் பதிலடி தாக்குதல் திறன்களை நிரூபித்தது என கூறியது.

வடகொரிய ஊடகத்தில் நேற்று 12-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பியாங்யாங் மத்திய சதுக்கத்தில் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்த காட்சிகள் வெளியாகின. இந்த அணிவகுப்பில் திட எரி பொருள் ஏவுகணைக்கு இடம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை லாஞ்சரும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட திட எரிபொருள் ஏவுகணைகள் விரைவாக ஏவப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் கிம் ஜாங் அன் ஆட்சிக்காலத்தில் இதுவரை, நீண்ட தூர திட எரிபொருள் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இல்லை என்னும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

நிபுணர் கருத்து

இதையொட்டி, சர்வதேச அமைதிக்கான 'கார்னகி என்டோவ்மென்ட்' அமைப்பைச் சேர்ந்த அணுசக்தி கொள்கை நிபுணர் அங்கிட் பாண்டா கருத்து தெரிவிக்கையில், " இது வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நவீனமயமாக்கல் இலக்குகளில் ஒன்றாகும். வரும் காலத்தில் வடகொரியா நீண்ட தூர திட எரிபொருள் ஏவுகணைகளின் சோதனையை நடத்தக்கூடும் என எதிர்பார்க்க முடியும்" என்று தெரிவித்தார்.


Next Story