வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை - தென்கொரியா, ஜப்பான் அதிர்ச்சி


வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை - தென்கொரியா, ஜப்பான் அதிர்ச்சி
x

கோப்புப்படம்

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது தென்கொரியாவையும், ஜப்பானையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சியோல்,

வடகொரியா, தென்கொரியா இடையே தீராப்பகை உள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுக்கிற அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக தென்கொரியா உள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தி வருகிற கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு பதிலடி தருகிறவிதத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அந்த நாடு 23 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 3 ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று வடகொரியா மீண்டும் 3 ஏவுகணைகளை ஏவி சோதித்து அதிரடி காட்டியது. அவற்றில் ஒன்று, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட 'ஐசிபிஎம்' ரக ஏவுகணை என தகவல்கள் கூறுகின்றன. இந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டு நடத்திய 7-வது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை இது என்பது உலக அரங்கை அதிர வைக்கிறது.

மேலும், அண்டை நாடுகளான தென்கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தலைநகர் பியாங்யாங் அருகில் இருந்து காலை 7.40 மணிக்கு ஏவப்பட்டு 2,000 கி.மீ. உயரத்துக்கு சென்று 750 கி.மீ. தொலைவுக்கு பறந்ததாக ஜப்பான் ராணுவ மந்திரி யாசுகாசு ஹமடா தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ந்துபோய் மியாகி, யமகடடா, நிகாட்டா ஆகிய வட மாகாணங்களில் வசிப்போருக்கு பிரதமர் புமியோ கிஷிடா அலுவலகம், தொலைக்காட்சி, வானொலி, செல்போன்கள் மற்றும் பொது ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகளை வெளியிட்டது.

கட்டிடங்களுக்குள்ளோ, பாதாள சுரங்கங்களுக்குள்ளோ போகும்படி மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். மேலும், அந்தப் பகுதிகளில் புல்லட் ரெயில்சேவைகள் தற்காலிகமாக நிறுதத்தப்பட்டன. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் எந்தவொரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

வடகொரியாவின் இந்த அதிரடி சோதனைகளுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த சோதனைகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

வடகொரியாவின் அதிரடி நடவடிக்கை குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில், "வடகொரியாவின் ஏவுகணைத் திட்டம் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதை இந்த சோதனை நிரூபித்துக்காட்டி உள்ளது" என தெரிவித்தது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேலும் கூறும்போது, "தென்கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் எங்கள் பாதுகாப்பு கடமைகள் இரும்புக்கவசமாக இருக்கின்றன" என தெரிவித்தார்.


Next Story