ஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல... துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!


ஊரடங்கு பிறப்பித்த வடகொரிய அதிபர்; கொரோனாவுக்கு அல்ல... துப்பாக்கி குண்டுகளை கண்டறிய..!!
x

எல்லையில் ராணுவ படை வாபசின்போது காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய அதிபர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

பியாங்யாங்,

உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவியபோது, பல்வேறு நாடுகளும் மக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன. ஆனால், கொரோனா பரவல் ஏற்பட்டபோது, தொற்று இல்லாத நாடுகளின் வரிசையில் வடகொரியா இடம் பெற்றது.

அந்நாட்டில் கொரோனா பரவலே இல்லை என அரசு பெருமையுடன் கூறி வந்தது. எனினும், 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, வடகொரியாவின் ரியாங்காங் வடக்கு மாகாணத்தில் ஹீசான் நகரில் வடகொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ராணுவ படைகளை குவித்தது.

சீன எல்லையை ஒட்டிய அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எல்லையை மூடுவதற்கும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராணுவ வீரர்களை வடகொரியா சமீபத்தில் வாபஸ் பெற தொடங்கியது. இதன்படி, கடந்த பிப்ரவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 10-ந்தேதி வரை முழுமையாக படை வாபஸ் பெறப்பட்டது.

இதில், கடந்த 7-ந்தேதி நகரில் இருந்து வீரர்கள் திரும்ப பெறப்பட்டபோது, 653 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போயுள்ளன என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவற்றை கண்டறிவதற்காக அந்த நகரில் ஊரடங்கு உத்தரவை அதிபர் கிம் ஜாங் அன் பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

முதலில், அதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் ராணுவ வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், துப்பாக்கி குண்டுகளை கண்டறிய முடியாத சூழலில், குடியிருப்புவாசிகளிடம் தகவலை தெரிவித்து விட்டு, கடுமையான சோதனையில் ஈடுபட தொடங்கினர் என்று பெயர் வெளியிட விருப்பமில்லாத நபர் ஒருவர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் எல்லாம் கொரோனா பரவலின்போது, ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய அதிபர் நகரம் முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது, அந்த பகுதி மக்களிடையே லேசான சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story