எங்களுடைய போர் மட்டுமின்றி உங்களுடைய போரும் கூட: அமெரிக்காவை குறிப்பிட்டு பேசிய நெதன்யாகு


எங்களுடைய போர் மட்டுமின்றி உங்களுடைய போரும் கூட:  அமெரிக்காவை குறிப்பிட்டு பேசிய நெதன்யாகு
x

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெறுவதே இஸ்ரேலின் நோக்கம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

டெல் அவிவ்,

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. பெண்கள், முதியவர்கள் என பலரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசு கூறியது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போரை நாங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம்.

நாங்கள் எப்போது பேசுகிறோமோ அப்போது, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெற வேண்டும் என்ற எங்களுடைய ஈடுபாட்டை, இஸ்ரேலின் உள்ளார்ந்த ஈடுபாட்டை, நான் மீண்டும் வெளிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், உலகில் நாகரீகத்தின் சக்தியை நீங்கள் வழிநடத்தி செல்கிறீர்கள் என்று அமெரிக்காவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, ஈரானின் பயங்கரவாத மையத்திற்கு எதிரான போர் இது. பாப் எல்-மாண்டிப் கடல்வழி ஜலசந்தியை மூடும்படி மிரட்டும் ஈரான், உலக நாடுகளின் இயக்கம் சார்ந்த சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.


Next Story