பாகிஸ்தானில் பரிதாபம்: வீட்டில் 'பிரிட்ஜ்' வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி


பாகிஸ்தானில் பரிதாபம்: வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகினர்.

லாகூர்,

பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து நடந்தது. மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டிடத்தில் பரவி இருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் கட்டிடம் முழுவதும் சேதமானது. மேலும் கட்டிடத்தின் ஒருபகுதி உருதெரியாமல் சிதைந்து விழுந்தது.

மீட்புப்பணி

மீட்பு பணி மேற்கொள்ள தீயணைப்பு வீரர்கள் சிதிலமடைந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது உடல்பாகங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே பிணக்குவியல்களால் அந்த வீடு நிறைந்து இருந்தது தெரிய வந்தது. இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தின் பேரில் தாக்குதல் அரங்கேறியதா? என்ற கோணத்தில் விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.

10 பேர் பலி

நள்ளிரவில் வீட்டில் திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பிரிட்ஜின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது.

புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர். மேலும் கனநேரத்தில் முழுவதுமாக வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இரங்கல்

கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் குதித்து வெளியேறிய ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story